Sunday 23 June 2013

இந்தியாவின் அடையாள அட்டை.

ராம் தனியார் நிறுவன ஊழியர். அலுவலகத்திலிருந்து வந்தவுடன் வாசலில் கிடந்த கடிதத்தை எடுத்திக் கொண்டு வீட்டின் உள்ளே சென்றார். குளித்துவிட்டு அரசாங்க முத்திரையோடு வந்திருந்த கடிதத்தை பிரித்து படித்தார். "வரும் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு எங்கள் அலுவலகத்திற்கு வரவும்" என ஏதோ வேற்று கிரக மனிதனின் கையெழுத்தைப் போல் அதிகாரி கிறுக்கி வைத்திறுந்தார். வழக்கம் போல் தனது மேலதிகாரியிடம் பொய் சொல்லி விடுப்பு வாங்கிக்கொண்டு வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அரசாங்க அலுவலகத்தில் நுழைந்தார். "ராம் யாருங்க, உள்ளே வாங்க!" மிளகாய் பொடி முகத்தில் பட்ட முகபாவனையுடன் அலுவலக உதவியாளர் அழைத்துவிட்டு சென்றார்.

ராம் உள்ளே நுழைந்ததும் , பத்துக்கு பதினைந்து அறையில் போய் உட்காரச் சொன்னார்கள். பின் ஒரு நீண்ண்ண்ட படிவத்தை கொடுத்து தனது சுய விபரங்களை பூர்த்தி செய்ய சொன்னார்கள். மேட்ரிமோனியல் தளம் கூட இவ்வளவு விவரங்களை கேட்க மாட்டார்கள். தனது பெயர், சொந்த ஊரிலிருந்து, வங்கி கணக்கு, இருப்பிடச்சான்று, கடவுச்சீட்டு எண், அடையாள அட்டை என ஒரு மினி ஜாதகத்தையே கேட்டிருந்தார்கள். கேட்காமல் விட்ட ஒரு சங்கதி எந்த நட்சத்திரத்தில் பிறந்தீர்கள் ?!!. பின்னர் ஒருவர் ஒரு அதி நவீன கருவியுடன் வந்து பல கோணங்களில் புகைப்படம் எடுத்தார், மற்றொருவர் அவரின் பத்து கைவிரல் ரேகையயும் பதிவெடுத்தார். மீண்டும் நம்பிக்கையின்றி கண்ணின் கருவிழியும் பதிவு செய்யப்பட்டது. நீங்கள் போகலாம்!. வெளியே வந்தவுடன் அவரைப் போலவே திகிலோடு காத்திருந்த ஒருவர் கேட்டார், "சார் ஆதார் கார்டு எப்ப குடுக்குறாங்க?".

இது ஏதோ ஒரு தனி மனிதன் சம்பந்தப்பட்ட விசயமில்லை, 110 கோடி மக்களின் அன்றாட செயல்கள் இனி தினமும் கண்காணிக்கப்படும். ஒரு தனி மனிதனின் சாதாரண தகவல்களை திரட்ட அரசாங்கத்திற்கு கூட அனுமதி இல்லை , ஆனால் நந்தன் நீல்கேனி தலைமையில் செயல்படும் ஒரு தனியார் அமைப்பு ஒட்டுமொத்த இந்தியாவின் "தனிப்பட்ட" தகவல்களை திரட்டி வருகிறது. நமது வங்கிக் கணக்கு, ஓட்டுனர் உரிமம், வேலை அடையாள அட்டை அனைத்தும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட உள்ளன. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் உங்கள் ஆதார் அட்டையில் ஒரு GPS கருவி இணைக்கப்பட்டு , தேவையானபோது உங்களை செயற்கைகோள் உதவியுடன் ஒரு கும்பல் பின் தொடர்ந்து கொண்டே வந்தால், உங்களின் வங்கி கணக்கை முடக்கி விட்டால், வேலை அடையாள அட்டையை செயலிழக்க செய்துவிட்டால்? இதெல்லாம் மிகைப்படுத்தி சொல்லப்படும் செய்தியாக தோன்றினால், அமெரிக்காவின் PRISM project இதைத்தான் தனது வாழ்நாள் லட்சியமாக செய்து கொண்டிருக்கிறது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் (NSA) இந்த போக்கிரித்தனத்தை அடுத்த பதிவில் பார்கலாம். அதுவரை பொறுமை இல்லாதவர்கள் "ENEMY OF THE STATE" திரைப்படத்தை பார்க்கவும்

No comments :

Post a Comment