Sunday, 25 May 2014

இந்துக்களை விரட்டிய முஸ்லிம்களும், ஆக்கிரமிக்கப்பட்ட சென்னையும்.

"மலை,ஏரி,காடு,ஆறு,கடற்கரை,முகத்துவாரம் என பலவகை புவிபகுதியையும் உள்ளடக்கிய மிகச் சில நகரங்களுள் சென்னையும் ஒன்று.மலை, வெடி வைத்து கொஞ்சம் கொஞ்சமாக தகர்கப்படுகிறது.ஏரிகள் குடியிருப்புகளுக்காக நிரப்பப்பட்டு மறைந்துவிட்டன.காடோ ... குருகி ,சிறுத்து சுற்று மதில்களால் கிண்டியில் காப்பற்றப்படுகிறது.முகத்துவாரத்தின் ஒரு சிறிய பகுதி மட்டும் எஞ்சியிருக்கிறது அடையாறில்.

செங்கல்பட்டு ஆறு அல்லது அடையாறு எனும் நதி கடலில் கலக்கும் இடம்தான் அடையாறு கழிமுகம்.சென்ற நூற்றாண்டு வரை பிரம்ம ஞானசபையிலிருந்து ஆழ்வார்பேட்டை வரை இக்கழிமுகம் பரவியிருந்தது.நடுவிலிருந்த பகுதிக்கு குபிள் தீவு என்று பெயர்.சென்னை நகரம் விரிந்து பரவத்தொடங்கியதும் , அடையாறு முகத்துவாரப்பகுதி மெல்ல மெல்ல கட்டிடங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இப்போது எஞ்சியிருப்பது பிரம்ம ஞானசபைக்கும் செட்டிநாடு அரண்மனைக்கும் இடையிலுள்ள பரப்பு மட்டுமே."

சென்னைக்கு இப்படி ஒரு அறிமுகம் தந்திருப்பவர் எழுத்தாளர் "தியோடர் பாஸ்கரன்". இவர் எழுதியுள்ள "இன்னும் பிறக்காத தலைமுறைக்காக" என்னும் நூலில் சூழலியல் பற்றி பல அருமையான தகவல்களை தந்துள்ளார். இந்தியாவின் ஓரிட வாழ்விகள், மேற்கு தொடர்ச்சி மலையின் அழிவின் விளிம்பில் உள்ள புள்ளினங்கள் மற்றும் வலசை போகும் புள்ளினங்கள் பற்றிய தகவல்கள் என தொகுத்துள்ளார்.தேசியப் பறவையாக மயில் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணியிலுள்ள தகவல் இதற்கு முன் யாரும் கூறாதது. அலையாத்திக் காடுகள் என்னும் தாவர இனம் அழிந்துவருவதையும், சுனாமியை இந்த அலையாத்தி காடுகள் தடுப்பதையும், அக்காடுகளின் அறிய உயிரினங்கள் பற்றியும் உள்ள தகவல்கள் வியப்பில் ஆழ்த்துபவை. சூழலியலில் இவ்வளவு எளிமையாக ஒரு நூல் தமிழில் இதற்கு முன் வந்ததில்லை எனலாம். இந்தியாவின் சுற்றுச்சூழல் குறித்த புத்தகங்களில் "இன்னும் பிறக்காத தலைமுறைக்காக" முக்கியமான ஒன்று.


வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள்: 200
விலை: ரூ. 120


 டிசம்பர் 6 1992, பாபர் மசூதி இடுக்கப்படுகிறது. தேசம் கடந்து பல அதிர்வலைகளை ஏற்படுத்தும் இந்த சம்பவம், வங்காளதேசத்தில் உள்ள இந்துக்களை மிகக் கடுமையாக பாதிக்கிறது. ஊரெங்கிலும் உள்ள இந்துக் கோயில்கள் தகர்கப்படுகின்றன மற்றும் இந்துக்களின் வீடுகள் சூறையாடப்படுகின்றன. இதனை "சுதாமய்" எனும் ஒருவரின் குடும்பத்தின் வாயிலாக கற்பனையாக சொல்வதுபோல் எழுத்தளர் தஸ்லிமா நஸ்ரின் "லஜ்ஜா" என்னும் நூலில்  அப்போது நடந்த நிகழ்ச்சிகளி கூறியுள்ளார். தமிழில் லஜ்ஜா என்றால் "அவமானம்" என்று பொருள். சுதாமய் ஒரு மருத்துவர், பல தலைமுறைகளாக வங்காளதேசத்தில் வாழ்ந்து வருபவர். இத்தனை களேபரங்களுக்கு பிறகும் அவர் தன் தாய்நாட்டை விட்டு வர மறுக்கிறார். அவரின் மகன், மகள் மற்றும் மனைவி தொடர்ந்து வற்புறுத்துயும் இதுதான் என் தாய் நாடு, இதைவிட்டு நாடோடி போல் அயல் நாட்டில் வாழ விரும்பவில்லை என மறுத்துவிடுகிறார். இறுதியாக அவரின் மகள் கலவரக்கார்களால் கடத்தப்படுகிறார், அவள் வீடு திருப்ம்பவில்லை; அவரின் வீடு சூறையாடப்படுகிறது; மகன் தாக்கப்பட்டு படுகாயமடையும் நிலையில் மிகுந்த துயரத்துடன் இந்தியாவிற்கு செல்ல முடிவெடுக்கிறார்.

சிறுபான்மையினரின் வலியையும் வேதனைகளையும் உணரவைக்கிற நாவல் இது.சிறுவயதில் இருந்தே ஒற்றுமையாக இருந்த இந்து, முஸ்லிம் இளைஞர்கள் இந்த நிகழ்விற்கு பின் ஒருவருடன் ஒருவர் பேசும் போது கூட பிரிவினையை உணர்வது, இந்து நண்பர்கள் கலவரத்தின் போது முஸ்லிம் நண்பர்களின் வீடுகளில் தங்க தயங்குவதும் என அப்போதைய பிரிவினைவாத மனநிலையயும், வங்காளதேசத்தின் அரசியல் குழப்பங்களையும் தெளிவாக விளக்கியுள்ளார். வெளியான சமயத்தில் மிகுந்த சர்ச்சைக்குள்ளான இந்த நாவல், வங்காளதேசத்தில் தடை செய்யப்பட்டது.
இந்து-முஸ்லிம் கலவரம் மட்டுமல்லாமல், சங்பரிவார அமைப்புகளின் சார்புநிலையையும், அவை இந்து முஸ்லிம் கலவரத்தை தூண்டிவிடுவதையும் கூட ஆசிரியர் அலசியுள்ளார். பாபர் மசூதி இடிப்பின் கருப்பு பக்கங்க்களின் ஒரு மாறுப்பட்ட கோணத்தை இந்த நூலில் அறியலாம். 

இந்த இரண்டு நூல்களும் நமக்கு ஒரு மாறுபட்ட அனுபவத்தை தருபவை. ஆனால் இரண்டும் நம்மை சுற்றியுள்ள மாசடைந்த, சக உயிர்களை மதிக்காத மனிதனின் போக்கை அழுத்தமாக பதிவு செய்பவை.

11 comments :

 1. கிருஷ்ணா.

  நல்லப்பகிர்வு!

  தியோடர் பாஸ்கரன் அவர்களது கட்டுரைகளை உயிர்மையில் அவ்வப்போது வாசித்து வருவதால் ஓரளவு அவரது எழுத்துக்கள் பரிட்சயமுண்டு.

  மேலும் அவர் உலக சினிமாக்கள் பற்றியும் எழுதி வருகிறார்.

  அழிக்கப்பட்ட பழைய சென்னைப்பற்றி அவ்வப்போது நானும் எழுதி வருவதுண்டு, சென்னை வீணாகப்போக முதல் காரணம் நம்ம மக்களே தான், அடுத்து அக்கால ஆங்கிலேயர்கள் முதல் இக்கால ஆட்சியாளர்கள் வரை ஆகும்.

  சென்னையில் நீண்ட காலமாக வசித்தவர்கள் சிலரிடம் நேரடியா பேசி பல விடயங்கள் அறிவதுண்டு ,அவர்கள் சொல்வதை எல்லாம் அப்படியானு கேட்டு வாயப்பிளக்க தோன்றும் அவ்வ்.

  இப்போ இருக்க ஏ.வி.எம் ஸ்டுடியோ சுத்தியே காடு தான் இருந்துச்சாம், கே.கே நகர் காடாக இருந்த இடமாம், கலைஞர் தான் அதை அழிச்ச புண்ணீயவான் அவ்வ்.

  இப்போ கிண்டில இருந்து கோயம்பேடு வழியா போகும் 100 அடி சாலைக்கு பேரு சென்னை -கொல்கத்தா ஹைவேஸ் ,அந்த பக்கம் 20-30 வருசம் முன்னலாம் ஆள் நடமாட்டமே இருக்காதாம், இப்போ ஆள் நாமாட்டம் இல்லாத நேரமேயில்லை அவ்வ்.

  # லஜ்ஜா ஆங்கிலத்தில் படிக்க முயன்று கைவிட்டது, தமிழில் வந்திருக்கிறதா படிக்க முயற்சிக்கணும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வவ்வால்.. வருகைக்கு நன்றி

   புத்தக கண்காட்சியில் கணிசமான அளவில் விற்பனையானது.. லஜ்ஜா தமிழில் கிழக்கு பதிப்பத்தில் வெளியிட்டுள்ளனர்.

   Delete
 2. தலைப்பு தவறான அர்த்தம் தருகிறது .

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ இர்ஷாத்.. வருகைக்கு நன்றி

   பதிவை படித்துவிட்டு பின் தலைப்பை மறுமுறை படிக்கவும். இன்னமும் தவறான அர்த்தம் தருகிறதா?

   இதில் முஸ்லிம்களை பற்றி தவறாக ஏதும் குறிப்பிடவில்லை. புத்தகங்களை விமர்சித்து மட்டுமே இந்த பதிவு.. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

   Delete
  2. உங்கள் விளக்கம் சரிதான். ஆனால் பதிவு படிப்பதற்கு முன் சற்று நெருடலாக இருந்தது.

   Delete
 3. சுண்டியிழுக்கும் தலைப்பு, ஆனால் "லக்ஜா" பற்றிப் படிக்கும் போது, புரிகிறது. உண்மை!
  சென்னை என்றல்ல பல நகரங்களில் கதி இதுவே!

  ReplyDelete
  Replies
  1. வாங்க யோகன்.

   எங்கே தலைப்புக்கு தனியாக விளக்கவுரை வைக்கும்படி ஆகிவிடுமோ என்று நினைத்தேன், ஆனால் நம் சகோக்கள் புத்திசாலிகள்.

   நதிக்கரை நாகரிகங்களை மனிதன் இழந்து கொண்டிருக்கிறான்,வேறு எதையோ நாகரிகம் என கருதிக்கொண்டு.

   Delete
 4. கிருஷ்ணா அவர்களே,
  பதிவு நன்றாகவே இருக்கிறது. பாராட்டுக்கள். ஆனால் தலைப்பை மட்டும் படிப்பவர்களின் மனதில் தவறான எண்ணங்கள் ஏற்பட அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி காரிகன்.

   தலைப்பை மட்டும் வைத்து, பதிவை பற்றி முடிவு செய்யலாமா..

   லஜ்ஜா புத்தகத்தின் சில வரிகளை கொடுக்கலாம் என முதலில் நினைத்திருந்தேன், ஆனால் அது சிலரை பதிவின் தலைப்பை பற்றி மேலும் தவறான எண்ணங்களே கொள்ளவைக்கும் என்பதால் நீக்கி விட்டேன். இதுவரை படிக்கவில்லை என்றால் ஒருமுறை லஜ்ஜா படித்துப் பாருங்கள். :)

   Delete
 5. தியோடர் பாஸ்கரனின் புத்தகத்தைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். சென்னை மட்டுமல்ல, இன்று இந்தியாவின் நிலைமையே இதுதான். சிறுகிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை ஆக்கிரமிப்பு என்பது கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. எங்க ஊர் எப்படி மாறி இருக்கிறது என்பதை என் அப்பாவும் தாத்தாவும் சொல்லும்போது ஆச்சரியமாக மட்டுமல்ல எரிச்சலாகவும் இருக்கும். மனிதனுக்கு அளவுகடந்த பேராசை.

  லஜ்ஜா புத்தகம் படிக்க வேண்டும்.

  தலைப்பு தவறான தொணியில் உள்ளது. இருப்பினும் பலரை ஈர்க்கும்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி குட்டிபிசாசு.

   புதிய அரசால் இனி கிராமங்களும் வளர்ச்சி என்ற பெயரால் ஆக்கிரமிக்கபடும். எரிச்சல் அதிகமாகமல் பார்த்துக்கொள்ளுங்கள் :) :)

   பதிவு பலரையும் சென்றடைய வேண்டும் என்று மட்டுமே வைக்கப்பட்ட தலைப்பு. மற்றபடி வேறு நோக்கங்கள் கிடையாது...

   Delete