Sunday, 28 July 2013

அமெரிக்கா உலகத்தையே ஒட்டுக் கேட்பதை தடுப்போம்

அமெரிக்காவுக்கு வயிற்று வலி, நாங்கள் மருந்து சாப்பிட வேண்டியிருந்ததால் பல நாட்களாக பதிவிட முடியவில்லை.சென்ற பதிவில் தனி நபர் தகவல்களை அதிகார வர்க்கம் எப்படியெல்லாம் திருடி தங்கள் சுய லாபங்களுக்காக உபயோகிக்கிறார்கள் என்று பார்த்தோம். இந்த தகவல் திருட்டை தடுக்க சில எளிய வழிமுறைகளைப் இப்பொழுது பார்க்கலாம். நேரிடையாக உள்ளே போவதற்குள் ஒரு சிறிய கதை.!
"தொலைவில் வசித்து வரும் இரண்டு நண்பர்கள் தினமும் இரவு அந்த நாளின் நிகழ்வுகளை தொலைபேசியில் பரிமாரிக்கொள்கிறார்கள். ஆனால் இருவரும் "உள்நாட்டுப்போர் நடந்து கொண்டிருக்கும் செழிப்பான"இரு நாட்டின் எல்லைகளில் வசிப்பதால் அடிக்கடி பேசிக்கொள்வது நாட்டின் அரசியல் விவகாரங்கள். அந்த நாடுகளின் இயற்கை வளத்தை கொள்ளையடிக்க உலக வல்லரசுகள் குட்டிக்கரணம் போட்டுக்கொண்டுருக்கின்றன; ராணுவத்தின் தகவல்களை அவ்வளவு சுலபமாக வல்லரசுகளால் படிக்க முடியவில்லை, காரணம் அவை சங்கேத மொழியில் இருப்பதும் பல அடுக்குகளாக அமைந்திருப்பதாலும். எனவே வல்லரசுகள் குறிப்பிட்ட அந்த இருவரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கிறார்கள்,முதலில் சில நாட்களுக்கு கொஞ்சம் உருப்படியான தகவல்கள் கிடைத்தன ஆனால் நாட்கள் செல்ல செல்ல அதில் ஒரு வெங்காயமும் கிடைக்கவில்லை.என்ன காரணம்?. முதலில் தங்களது வியுகங்கள் ஏதும் சரியாக பலனளிக்காமல் போனபோது, இரு நாட்டு ராணுவமும் தங்கள் எல்லையோர மக்களின் தொலைபேசி மற்றும் பிற தொழில்நுட்ப தகவல் தொடர்புகளை கண்காணிக்கும்போது வேறு நாடுகளின் இணைய முகவரிகளும் அந்த தகவல்களில் பெருநர் பகுதியில் இருந்தன. விழித்துக்கொண்ட தொழில்நுட்ப வல்லுனர்கள் தொடர்ந்து கண்காணிக்கும் போது வேறு யாரோ இவர்களின் இணையத்தில் கொக்கியைப் போட்டு தகவல்களை திருடுவது தெரிந்தது. உடனே தங்கள் நாட்டின் அனைத்து மின்னனு தகவல்களையும் மறையீடு செய்துவிட்டனர். எனவே தான் தகவல்கள் கிடைத்தாலும் அதை வைத்து உருப்படியாக ஒரு செய்தியையும் அவர்களால் படிக்க/தெரிந்து கொள்ள முடியவில்லை"
தகவல் திருடுவதைத் தடுக்க முடியாவிட்டாலும் அதை புரியாத மொழியில் அதாவது சங்கேத வார்த்தைகளாவும், மறையீடும் செய்தால், திருடப்பட்டாலும் அதை வைத்து ஒன்றும் கிழிக்க முடியாது.ஒரு ராணுவம் சுலபமாக தகவல்களை மறையீடு செய்யும் தொழில்நுட்பத்தை வைத்திருக்க முடியும் ஆனால் சாதாரண மக்கள் எவ்வாறு மறையீடு செய்து தங்கள் தகவல்களை பாதுகாத்துக்கொள்வது?. இதற்கு பல தொழில்நுட்ப இணைய தளங்கள் தற்போது சேவையளிக்கத் தொடங்கியுள்ளன. அவற்றுள் முக்கியமான இரண்டு நிறுவனங்களை இப்போது பார்ப்போம்.
முதலில் "Silent Circle". அலைபேசி தகவல்களை மறையீடு செய்யும் சேவை அளிக்கும் இந்த நிறுவனம் , அலைபேசியிலிருந்து வெளியில் செல்லும் தகவல்களை பயனாளரின் தனிப்பட்ட மறையீட்டு குறிச்சொல்லை வைத்து செய்திகளை மறைத்து அனுப்புகிறது. நீங்களும், நீங்கள் தொடர்பு கொள்பவரும்  Silent Circle சேவையை உபயேகிக்கிறீர்கள்
எனில் இருவரது தகவல்களும் தங்களது தனிப்பட்ட குறிச்சொல்லால் மறைத்து அனுப்பப்படும். யாரேனும் ஒருவர் மட்டும் Silent Circle சேவையை உபயேகித்தால் கூட பயனாளரின் தகவல்கள் தனிப்பட்ட குறிச்சொல்லால் மறைத்து அனுப்பப்படுவதும்,அதே சமயம் உங்களுக்கு வரும் செய்திகள் இணையத்திலிருந்து உங்களுக்கு வரும் வரை Silent Circle-ஆல் மறைத்து வைக்கப்படுவதும் இதன் தனிச்சிறப்பு. இதற்கு சேவைக் கட்டணமாக $10 டாலர் வசூலிக்கிறார்கள். சேவைகளின் தரத்தையும், எண்ணிக்கையும் பொருத்து கட்டணங்கள் மாறுபடலாம்.

Silent Circle இயங்கும் முறை:
அடுத்தது enlocked, இமெயில் மற்றும் கோப்புகளை பாதுகாப்பாக அனுப்ப உதவும் இந்த தளம் , உங்கள் இமெயில் செய்திகளை கொத்துபுரோட்டாவாக மாற்றி அனுப்புகிறது. முதலில் enlocked மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணிணி அல்லது அலைபேசியில் நிறுவி கொள்ளவேண்டும், இப்பொழுது, உங்கள் இமெயில் கணக்கை இதனுடன் இணைத்துவிட்டால் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு செய்தியும் மறையீடு செய்யப்பட்டு அனுப்பப்படும், நடுவில் யாரேனும் மடக்கி பிரித்து படித்தாலும் ஆங்கிலோ-இந்திய மாணவர்கள் தமிழ் நாளிதளைப் பார்ப்பது போல் ஒன்றும் புரியாமல் முழிக்க வேண்டியதுதான். தகவல் பெருபவரிடம் enlocked மென்பொருள் இல்லையெனில் அவர்களுக்கு enlocked-ஐ தரவிறக்கிக் கொள்ளும்படி செய்தியைக் காட்டும். தகவல்களை மறையீடு செய்ய OAuth என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள்.
சாதாரண மக்களும் உபயோகிக்கும் வண்ணம் புரட்சிகரமான இந்த் இரு தொழில்நுட்பங்களும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையப்போவது நிச்சயம். நம் தனிமையையும், சுதந்திரத்தையும் திருப்பி அளிக்கும் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் அனைத்து மக்களின் பொருளாதார சக்திக்கும் உட்பட்டு சேவை அளித்தால் தொடர்ந்து கண்காணிக்கப்படுவது குறித்து கவலையின்றி இணையத்தில் உலவலாம்.

3 comments :

 1. Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)

  (Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி.

   Word verification -ஐ நீக்கி விட்டேன். நீங்கள் நினைத்ததைக் கூறலாம், பின்னூட்டப்பெட்டி எப்பொழுதும் திறந்தே இருக்கும் நண்பரே.

   Delete