Sunday, 17 November 2013

திடீரென்று சூரியன் மறைந்து விட்டால் என்னவெல்லம் நடக்கும்?

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை-நு சொல்லுவாங்க.ஆனால் சூரியன் திடீர்னு மறைஞ்சு போச்சுன்னா?சூரியன சுட்டது யாரு?(பன்னிகுட்டி ராமசாமி ஞாபகம் வந்தா நான் பொருப்பில்லை). பல தடவை நீங்க யோசிச்சிருப்பீங்க, கூகிள் ல தேடி நிறைய படிச்சிருக்கலாம்.அப்பிடி எதுவும் யோசிக்காதவங்க, படிக்கதவங்க இங்க படிச்சு தெளிவாயிடுங்க.இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு _________ வேணும். ஆஆஅ பாத்து எல்லாரும் கடுப்புல இருப்பீங்க. அதனால தான் கோடு போட்டுருகேன். நீங்களே அந்த அருமையான பேரை நிரப்பிக்கோங்க.
சரி இனிமே செந்தமிழ்-கு மாறிடலாம்.
நாம் வாழும் இந்த பூமி இயங்குவதற்கு சூரியன் ஒரு மிகப்பெரிய காரணம். ஆனால் சூரியன் இல்லாமலும் பூமியால் இயங்க முடியும். நமக்கு சூரியனிடமிருந்து கிடைப்பவை ஒளி மற்றும் பருவ கால மற்றங்கள். கடலுக்கடியில் சுமார்  1000 மீட்டர்களுக்கு மேல் சூரிய ஒளி இருக்காது. அங்கு வாழும் உயிரினங்களுக்கு சூரியன் என்று ஒன்று இருப்பதே தெரியாது. எனவே அவற்றுக்கு சூரியன் இல்லாவிட்டாலும் பெரிய பாதிப்பில்லை.ஆனால் மற்ற உயிரினங்கள் கண்டிப்பாக சூரியன் இல்லாமல் வாழ்வது கடினம். ஒருவேளை சூரியன் திடீரென்று மறைந்து போனால்..?

இதைப் பற்றி பார்ப்பதற்க்குள் ஒளி மற்றும் ஈர்ப்பு ஆற்றல் சூரியனிடமிருந்து பூமிக்கு பரவும் விதம் பற்றி பார்த்துவிடுவோம். ஒளி அலைகள்(wave nature) வினாடிக்கு 299 792 458 மீட்டர் வேகத்தில் பயனிக்கின்றன. ஒளியை நாம் ஒரு பொருளாக(particle nature) எடுத்துக்கொண்டால் போடான்(photon) எனப்படும் எடையில்லா பொருட்களால் கட்டமைக்கப்ப்ட்டிருக்கும். ஈர்ப்பு விசயும் க்ராவிடான்(graviton) என்ற பொருளால் ஆனது என்ற கருதுகோள் உள்ளது, ஆனால் சரிவர நிரூபிக்கப்படவில்லை. ஈர்ப்பு சக்தியும் ஒளியின் வேகத்திலேயே பயணம் செய்வதால் இரண்டும் பூமியை வந்தடைய ஓரே நேரமே எடுத்துக்கொள்கின்றன. சூரியனிடமிருந்து ஒளி பூமிக்கு வந்து சேர 8நிமிடம் 26 வினாடிகள் ஆகும். அதாவது 8.26 நிமிடங்களுக்கு முன் சூரியனில் தோன்றிய ஒளியைத்தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒரு நட்சத்திரம் 200 ஒளியாண்டுகள் தொலைவில் இருந்தால் 200 வருடங்களுக்கு முன் அந்த நட்சத்திரம் எப்படி இருந்ததோ அது தான் நாமக்கு இன்று தெரிகிறது. எனவே சூரியன் மறைந்து 8.26 நிமிடங்களுக்கு சூரியனின் ஒளியும், ஈர்ப்பு அலைகளும் நமக்கு வந்து கொண்டுதான் இருக்கும். அதுவரை பூமியும் தன் இயக்கத்தை மாற்றிக்கொள்ளாது சூரியன் இருப்பதைப்போலவே தனது சுற்றுவட்டப் பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும். ஆனால் 8நிமிடம் 27-ம் நொடி, காட்சிகள் மாறிவிடும்(பூமியில் மட்டும்).

ஒரு நீளமான கயிற்றில் ஒரு கல்லைக்கட்டி சிறிது நேரம் சுற்றிவிட்டு கயிற்றை விட்டுவிட்டால் அந்த கல் கயிற்றை விட்ட இடத்திலிருந்து ஒரு நேர்கோட்டில் பயணிக்க ஆரம்பிக்கும். அதுபோலவே பூமியும் சூரியன் மறைந்து 8.26  நிமிடங்களுக்கு பிறகு அதன் அப்போதைய இடத்தில் இருந்து ஒரு நேர்கோட்டில்  கிட்டத்தட்ட 29.27 கீ.மி /வினாடி வேகத்தில் நேரான பாதையில் பூமி பயணிக்க ஆரம்பிக்கும். எங்கும் இருள், குழப்பம், பயம் ஒரு சேர நம்மை ஆட்கொள்ளும். ஆனால் எதுவும் முடிந்துவிடவில்லை, நம்மிடம் இருக்கும் கச்சா பொருட்களும் இதர சாதனங்களின் உதவியாலும் பல வருடங்களுக்கு செயற்கையாக ஒளியூட்டி நாம் வாழலாம்.
Earth Without Sun


சூரியனின் ஒளி மறைந்த உடனே ஒளிச்சேர்க்கை(Photosynthesis) நின்று விடும்.இது மிகப்பெரிய அளவில், கிட்டத்தட்ட 99.9% ஒளிச்சேர்க்கை முடங்கிவிடும். ஒளிச்சேர்க்கை இல்லாததால் கரியமில வாயுவை உயிர்வளியாக மாற்றும் செயலும் நின்று விடும். ஆனால் நம் வளிமண்டலத்தில் கிட்டத்தட்ட க்விண்டில்லியன் கிலோகிராம் ஆக்சிஜன் உள்ளது(1000,000,000,000,000,000 கிலோ.கி). இது உலகில் உள்ள 700 கோடி மக்கள், அனைத்து உயிரினங்களுக்கும் பல ஆயிரம் வருடங்களுக்கு போதுமானது. சிறிய செடிகள் சில நாட்களில்  மடிந்து விடும். மிகப்பெரிய மரங்கள் அதன் வேர், மற்றும் தண்டுகளில் சேமித்து வைத்திருக்கும் சர்க்கரை மற்றும் தண்ணீர் கொண்டு பல வருடங்கள் வாழலாம். ஆனால் சூரியன் இல்லததால் பூமியின் மேல் அடுக்கில் உள்ள வெப்பம் வேகமாக வெளியேற்றப்படும், எனவே பூமி குளிர்வடையத் தொடங்கும்.இதனால் மரங்களில் உள்ள நீர் மற்றும் சத்துக்கள் கெட்டியாகி பெரிய மரங்களும் மடிந்துவிடும். முதலில் வேகமாக வெளியேறிய வெப்பம், பின் மெல்ல வேகம் குறைந்து சீரான வேகத்தில் வெளியேறும். பூமியின் சராசரி வெப்ப நிலை 15' செல்சியஸ். சூரியன் மறைந்த ஒரு வாரத்தில் வெப்ப நிலை 0' செல்சியஸ் ஆக இருக்கும். இது பல நேரங்களில் உலகின் பல பகுதிகளில் பார்த்தது தான், ஆனால் இப்பொழுது உலகம் முழுவதும் இதே வெப்பநிலை இருக்கும். உலகில் உணவு இல்லாத்தாலும், கடும் குளிராலும், மனிதனும், மற்ற உயிரினங்களும் வாழ்வதற்கு கடும் போரட்டங்களை சந்த்தித்துக்கொண்டிருப்பார்கள்.


சூரியன் மறைந்து ஒரு வருடம் கழித்து பூமியின் சராசரி வெப்பநிலை -73' செல்சியஸ், அதாவது 0'F. இது அண்டார்ட்டிக்கவின் அதிகப்படியான குளிர்நிலையை விட அதிகம். நம் பூமியின் மையத்தில் அழுத்ததினாலும், கதிர்வீச்சுகளினாலும் மிகப்பெரிய அளவில் வெப்பம் உருவாகிறது. உலகின் சில இடங்களில் எரிமலையாகவும், புவிவெப்ப மண்டலமாகவும் இது வெளிப்படுகின்றது. 

ஐஸ்லாந்து நாடு ஒரு மிகச் சிறந்த உதாரணம். பூமியின் அடி ஆழத்தில் உண்டாகும் வெப்பம் இங்கு இயற்கையாகவே வெந்நீர் ஊற்றுகளாகவும், எரிமலைகளாகவும் வெளியில் வருகிறது. அங்கு 25% மின்சாரம் புவிவெப்ப ஆற்றல் மூலமாகவே உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே இது போன்ற புவிவெப்ப மண்டல பகுதியில் மனிதனால் பல வருடங்கள் தாக்குப்பிடிக்க முடியும்.


ஒன்று முதல் மூன்று வருடங்களில் கடல்கள் அனைத்தும் உறைந்துவிடும். இப்பொழுது பூமியின் மேல் முழுதாக பனி மூடியிருக்கும். பனிக்கட்டிகள் நீரை விட லேசானவை, அவை நீரில் மிதக்கும். பனிக்கட்டி ஒரு நல்ல வெப்ப கடத்தாப்பொருள். அது கீழே உள்ள நீரில் உள்ள வெப்பத்தை பாதுகாத்து திரவ நிலையிலேயே வைத்துக்கொள்ளும்.நாம் முதலில் பார்த்த கடலடியில் சூரியனின் துணையின்றி வாழும் உயிரினங்கள் தொடர்ந்து வாழ இந்த பனிபடலமும், புவியின் மையத்துலிருந்து வரும் வெப்ப ஆற்றலும் உதவும். எனவே பூமியில் உயிரினங்கள் வாழ்ந்துகொண்டு தான் இருக்கும்!.அந்த உயிரினங்கள் கீமோஸிந்தஸிஸ்(chemosynthesis) முறையில் தனது ஆற்றலை உருவாக்குபவை. அதாவது, வெப்பம் மற்றும் மீத்தேன் வாயுவைக்கொண்டு தனது உணவை உருவாக்கிகொள்ளும்.


சராசரியாக பத்து முதல் இருபது ஆண்டுகளில் பூமியின் வெப்ப நிலை -150 ஐ தாண்டி சென்றுவிடும். நம் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள் எல்லாம் குளிர்ந்து துளிகளாகவும், பனியாகவும் விழத்தொடங்கிவிடும். மீத்தேன் பழுப்பு நிறமாகவும், சோடியம் மஞ்சளாகவும், ஆக்சிஜன் வெளிர் நீலமாகவும்,நைட்ரோஜன் நிறமற்றும் படிந்து கிடக்கும். ஒருவேளை மனிதர்கள் உயிருடன் இருந்தால் கொஞ்சம் ஆக்சிஜன் பனிக்கட்டியை எடுத்து நெருப்பில் போட்டு சுட வைத்து அதன் மூலம் வரும் உயிர்வளியை சுவாசித்து வாழவேண்டும். எப்படியிருந்தாலும் பூமியின் மையத்தில் உள்ள வெப்பம் புவிப்பரப்பில் பரவி பல நூறாயிரம் வருடங்களுக்கு பூமியுன் சராசரி வெப்ப நிலையை  -280' செல்சியஸாக தக்கவைத்துக்கொண்டிருக்கும். இது உறைநிலையை விட 2' செல்ஸியஸ் மட்டுமே குறைவு.

நாம் இருக்கும் இந்த பால்வீதி நிலவின் ஒளியைப் போல் முந்நூற்றில் ஒரு பங்கு(1/300) ஒளியை நமக்கு வழங்கிக் கொண்டிருக்கும். எனவே நாம் இந்த பிரபஞ்சத்தை பார்த்துக்கொண்டிருப்போம் சூரிய ஒளியில்லாமல். நம் பூமி உயிரினங்களை சுமந்து செல்லும் ஒரு விண்கலம் போல் இந்த பிரபஞ்சத்தில் பயணித்துக்கொண்டிருக்கும். ஒருவேளை நம் பூமி பயணிக்கும் பாதையில் ஏதேனும் நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசைக்கு உட்பட்டால், அதனிடமிருந்து சரியான தொலைவில் சுற்றி வந்தாலோ வளிமண்டலம் உருவாகும், நிலவு ஒளிபெறும், கடல்களில் அலைகளும் புயல்களும் உருவாகும், மீண்டும் பூமியில் உயிர்கள் தழைக்கும். மனிதன் ஏதேனும் ஆழ்கடல் கப்பலில் அணு ஆற்றல் மூலம் அல்லது புவிவெப்ப ஆற்றல் மூலம் வாழ்ந்து வந்தால், மீண்டும் இந்த பூமியில் வசிக்க இன்னொரு வாய்ப்பு கிடைக்கும்.

ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும், அக்கால மனிதன் பூமியை கண்டிப்பாக நேசிப்பான்.
 

4 comments :

 1. படங்களுடன் விளக்கங்கள் அசர வைக்கிறது...

  தொடர வாழ்த்துக்கள்....!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி .

   எப்பொழுதும் முதல் பின்னூட்டம் நீங்கள் தான்!. மகிழ்ச்சி...

   உங்கள் விருப்பமான தலைப்பு இருந்தால் சொல்லுங்கள். அடுத்த பதிவு உங்களுக்கு தான்.

   Delete