Sunday, 28 July 2013

அமெரிக்கா உலகத்தையே ஒட்டுக் கேட்பதை தடுப்போம்

அமெரிக்காவுக்கு வயிற்று வலி, நாங்கள் மருந்து சாப்பிட வேண்டியிருந்ததால் பல நாட்களாக பதிவிட முடியவில்லை.சென்ற பதிவில் தனி நபர் தகவல்களை அதிகார வர்க்கம் எப்படியெல்லாம் திருடி தங்கள் சுய லாபங்களுக்காக உபயோகிக்கிறார்கள் என்று பார்த்தோம். இந்த தகவல் திருட்டை தடுக்க சில எளிய வழிமுறைகளைப் இப்பொழுது பார்க்கலாம். நேரிடையாக உள்ளே போவதற்குள் ஒரு சிறிய கதை.!
"தொலைவில் வசித்து வரும் இரண்டு நண்பர்கள் தினமும் இரவு அந்த நாளின் நிகழ்வுகளை தொலைபேசியில் பரிமாரிக்கொள்கிறார்கள். ஆனால் இருவரும் "உள்நாட்டுப்போர் நடந்து கொண்டிருக்கும் செழிப்பான"இரு நாட்டின் எல்லைகளில் வசிப்பதால் அடிக்கடி பேசிக்கொள்வது நாட்டின் அரசியல் விவகாரங்கள். அந்த நாடுகளின் இயற்கை வளத்தை கொள்ளையடிக்க உலக வல்லரசுகள் குட்டிக்கரணம் போட்டுக்கொண்டுருக்கின்றன; ராணுவத்தின் தகவல்களை அவ்வளவு சுலபமாக வல்லரசுகளால் படிக்க முடியவில்லை, காரணம் அவை சங்கேத மொழியில் இருப்பதும் பல அடுக்குகளாக அமைந்திருப்பதாலும். எனவே வல்லரசுகள் குறிப்பிட்ட அந்த இருவரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கிறார்கள்,முதலில் சில நாட்களுக்கு கொஞ்சம் உருப்படியான தகவல்கள் கிடைத்தன ஆனால் நாட்கள் செல்ல செல்ல அதில் ஒரு வெங்காயமும் கிடைக்கவில்லை.என்ன காரணம்?. முதலில் தங்களது வியுகங்கள் ஏதும் சரியாக பலனளிக்காமல் போனபோது, இரு நாட்டு ராணுவமும் தங்கள் எல்லையோர மக்களின் தொலைபேசி மற்றும் பிற தொழில்நுட்ப தகவல் தொடர்புகளை கண்காணிக்கும்போது வேறு நாடுகளின் இணைய முகவரிகளும் அந்த தகவல்களில் பெருநர் பகுதியில் இருந்தன. விழித்துக்கொண்ட தொழில்நுட்ப வல்லுனர்கள் தொடர்ந்து கண்காணிக்கும் போது வேறு யாரோ இவர்களின் இணையத்தில் கொக்கியைப் போட்டு தகவல்களை திருடுவது தெரிந்தது. உடனே தங்கள் நாட்டின் அனைத்து மின்னனு தகவல்களையும் மறையீடு செய்துவிட்டனர். எனவே தான் தகவல்கள் கிடைத்தாலும் அதை வைத்து உருப்படியாக ஒரு செய்தியையும் அவர்களால் படிக்க/தெரிந்து கொள்ள முடியவில்லை"
தகவல் திருடுவதைத் தடுக்க முடியாவிட்டாலும் அதை புரியாத மொழியில் அதாவது சங்கேத வார்த்தைகளாவும், மறையீடும் செய்தால், திருடப்பட்டாலும் அதை வைத்து ஒன்றும் கிழிக்க முடியாது.ஒரு ராணுவம் சுலபமாக தகவல்களை மறையீடு செய்யும் தொழில்நுட்பத்தை வைத்திருக்க முடியும் ஆனால் சாதாரண மக்கள் எவ்வாறு மறையீடு செய்து தங்கள் தகவல்களை பாதுகாத்துக்கொள்வது?. இதற்கு பல தொழில்நுட்ப இணைய தளங்கள் தற்போது சேவையளிக்கத் தொடங்கியுள்ளன. அவற்றுள் முக்கியமான இரண்டு நிறுவனங்களை இப்போது பார்ப்போம்.
முதலில் "Silent Circle". அலைபேசி தகவல்களை மறையீடு செய்யும் சேவை அளிக்கும் இந்த நிறுவனம் , அலைபேசியிலிருந்து வெளியில் செல்லும் தகவல்களை பயனாளரின் தனிப்பட்ட மறையீட்டு குறிச்சொல்லை வைத்து செய்திகளை மறைத்து அனுப்புகிறது. நீங்களும், நீங்கள் தொடர்பு கொள்பவரும்  Silent Circle சேவையை உபயேகிக்கிறீர்கள்
எனில் இருவரது தகவல்களும் தங்களது தனிப்பட்ட குறிச்சொல்லால் மறைத்து அனுப்பப்படும். யாரேனும் ஒருவர் மட்டும் Silent Circle சேவையை உபயேகித்தால் கூட பயனாளரின் தகவல்கள் தனிப்பட்ட குறிச்சொல்லால் மறைத்து அனுப்பப்படுவதும்,அதே சமயம் உங்களுக்கு வரும் செய்திகள் இணையத்திலிருந்து உங்களுக்கு வரும் வரை Silent Circle-ஆல் மறைத்து வைக்கப்படுவதும் இதன் தனிச்சிறப்பு. இதற்கு சேவைக் கட்டணமாக $10 டாலர் வசூலிக்கிறார்கள். சேவைகளின் தரத்தையும், எண்ணிக்கையும் பொருத்து கட்டணங்கள் மாறுபடலாம்.

Silent Circle இயங்கும் முறை:




அடுத்தது enlocked, இமெயில் மற்றும் கோப்புகளை பாதுகாப்பாக அனுப்ப உதவும் இந்த தளம் , உங்கள் இமெயில் செய்திகளை கொத்துபுரோட்டாவாக மாற்றி அனுப்புகிறது. முதலில் enlocked மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணிணி அல்லது அலைபேசியில் நிறுவி கொள்ளவேண்டும், இப்பொழுது, உங்கள் இமெயில் கணக்கை இதனுடன் இணைத்துவிட்டால் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு செய்தியும் மறையீடு செய்யப்பட்டு அனுப்பப்படும், நடுவில் யாரேனும் மடக்கி பிரித்து படித்தாலும் ஆங்கிலோ-இந்திய மாணவர்கள் தமிழ் நாளிதளைப் பார்ப்பது போல் ஒன்றும் புரியாமல் முழிக்க வேண்டியதுதான். தகவல் பெருபவரிடம் enlocked மென்பொருள் இல்லையெனில் அவர்களுக்கு enlocked-ஐ தரவிறக்கிக் கொள்ளும்படி செய்தியைக் காட்டும். தகவல்களை மறையீடு செய்ய OAuth என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள்.
சாதாரண மக்களும் உபயோகிக்கும் வண்ணம் புரட்சிகரமான இந்த் இரு தொழில்நுட்பங்களும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையப்போவது நிச்சயம். நம் தனிமையையும், சுதந்திரத்தையும் திருப்பி அளிக்கும் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் அனைத்து மக்களின் பொருளாதார சக்திக்கும் உட்பட்டு சேவை அளித்தால் தொடர்ந்து கண்காணிக்கப்படுவது குறித்து கவலையின்றி இணையத்தில் உலவலாம்.

Wednesday, 3 July 2013

உலகத்தையே ஒட்டுக் கேட்கும் அமெரிக்கா!


சென்ற பதிவில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் Prism Project-ஐ பற்றி ஒரு வரியில் பார்த்தோம். ப்ரிசம் எப்படி ஒளியின் மூலத்தை ஏழு பகுதிகளாக பிரித்து காட்டுகிறதோ, அது போல ஒரு தனி மனிதனின் பலதரப்பட்ட தகவல்களை பிரித்துக் காட்டி(கொடுப்பது)யபடி இருப்பதே இதன் நோக்கம்.உங்களின் ஒவ்வொரு செயல்களையும் கண்காணிக்கும் இது கிட்டத்தட்ட ஒரு மறைந்திருக்கும் உளவாளி போன்றது.


Sunday, 23 June 2013

இந்தியாவின் அடையாள அட்டை.

ராம் தனியார் நிறுவன ஊழியர். அலுவலகத்திலிருந்து வந்தவுடன் வாசலில் கிடந்த கடிதத்தை எடுத்திக் கொண்டு வீட்டின் உள்ளே சென்றார். குளித்துவிட்டு அரசாங்க முத்திரையோடு வந்திருந்த கடிதத்தை பிரித்து படித்தார். "வரும் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு எங்கள் அலுவலகத்திற்கு வரவும்" என ஏதோ வேற்று கிரக மனிதனின் கையெழுத்தைப் போல் அதிகாரி கிறுக்கி வைத்திறுந்தார். வழக்கம் போல் தனது மேலதிகாரியிடம் பொய் சொல்லி விடுப்பு வாங்கிக்கொண்டு வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அரசாங்க அலுவலகத்தில் நுழைந்தார். "ராம் யாருங்க, உள்ளே வாங்க!" மிளகாய் பொடி முகத்தில் பட்ட முகபாவனையுடன் அலுவலக உதவியாளர் அழைத்துவிட்டு சென்றார்.

ராம் உள்ளே நுழைந்ததும் , பத்துக்கு பதினைந்து அறையில் போய் உட்காரச் சொன்னார்கள். பின் ஒரு நீண்ண்ண்ட படிவத்தை கொடுத்து தனது சுய விபரங்களை பூர்த்தி செய்ய சொன்னார்கள். மேட்ரிமோனியல் தளம் கூட இவ்வளவு விவரங்களை கேட்க மாட்டார்கள். தனது பெயர், சொந்த ஊரிலிருந்து, வங்கி கணக்கு, இருப்பிடச்சான்று, கடவுச்சீட்டு எண், அடையாள அட்டை என ஒரு மினி ஜாதகத்தையே கேட்டிருந்தார்கள். கேட்காமல் விட்ட ஒரு சங்கதி எந்த நட்சத்திரத்தில் பிறந்தீர்கள் ?!!. பின்னர் ஒருவர் ஒரு அதி நவீன கருவியுடன் வந்து பல கோணங்களில் புகைப்படம் எடுத்தார், மற்றொருவர் அவரின் பத்து கைவிரல் ரேகையயும் பதிவெடுத்தார். மீண்டும் நம்பிக்கையின்றி கண்ணின் கருவிழியும் பதிவு செய்யப்பட்டது. நீங்கள் போகலாம்!. வெளியே வந்தவுடன் அவரைப் போலவே திகிலோடு காத்திருந்த ஒருவர் கேட்டார், "சார் ஆதார் கார்டு எப்ப குடுக்குறாங்க?".

இது ஏதோ ஒரு தனி மனிதன் சம்பந்தப்பட்ட விசயமில்லை, 110 கோடி மக்களின் அன்றாட செயல்கள் இனி தினமும் கண்காணிக்கப்படும். ஒரு தனி மனிதனின் சாதாரண தகவல்களை திரட்ட அரசாங்கத்திற்கு கூட அனுமதி இல்லை , ஆனால் நந்தன் நீல்கேனி தலைமையில் செயல்படும் ஒரு தனியார் அமைப்பு ஒட்டுமொத்த இந்தியாவின் "தனிப்பட்ட" தகவல்களை திரட்டி வருகிறது. நமது வங்கிக் கணக்கு, ஓட்டுனர் உரிமம், வேலை அடையாள அட்டை அனைத்தும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட உள்ளன. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் உங்கள் ஆதார் அட்டையில் ஒரு GPS கருவி இணைக்கப்பட்டு , தேவையானபோது உங்களை செயற்கைகோள் உதவியுடன் ஒரு கும்பல் பின் தொடர்ந்து கொண்டே வந்தால், உங்களின் வங்கி கணக்கை முடக்கி விட்டால், வேலை அடையாள அட்டையை செயலிழக்க செய்துவிட்டால்? இதெல்லாம் மிகைப்படுத்தி சொல்லப்படும் செய்தியாக தோன்றினால், அமெரிக்காவின் PRISM project இதைத்தான் தனது வாழ்நாள் லட்சியமாக செய்து கொண்டிருக்கிறது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் (NSA) இந்த போக்கிரித்தனத்தை அடுத்த பதிவில் பார்கலாம். அதுவரை பொறுமை இல்லாதவர்கள் "ENEMY OF THE STATE" திரைப்படத்தை பார்க்கவும்

Sunday, 19 May 2013

கோபுரங்கள் ஏன் கட்டப்பட்டன?

உலகின் மூத்த சமூகமாகிய நாம், பல கலைகளில் சிறந்து விளங்கியுள்ளோம். குறிப்பாக கட்டடக்கலையில்!. தமிழ்நாட்டில் உள்ளதைப்போல் உலகில்  கட்டடக்கலையை  இந்த அளவுக்கு சிறப்பாக பயன்டுத்திய நாகரீகமாக  எகிப்து மற்றும் மெசபடோமிய நாகரீகங்களைக் கூறலாம். ஆனால் அவர்கள் உருவாக்கிய கட்டிடங்கள் இன்று சிதிலமடந்து காணப்படுகின்றன.

திருச்செந்தூர் முருகன்
கோபுரங்கள் தமிழனின்  கட்டடக்கலைக்கு மிக சரியான உதாரணம். கோபுரங்களின் வடிவமைப்பை கவனித்திருக்கிரீர்களா?. இரண்டு கையையும் கூப்பி வணக்கம் செலுத்துவது போல் செய்ய்யுங்கள். இது தான் கோபுரம்!!. நாம் கையெடுத்துக் கும்பிட்டால் , நம்மை திரும்பவும் கும்பிடும் வண்ணம் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.கும்பிட்டு வணக்கம் செலுத்துவது தமிழரின் பாரம்பரியம், ஹாய் dude கலாசாரத்தில் நாம் மறந்துவிட்ட ஒன்று இது. கோபுரங்கள் எதற்காக கட்டப்பட்டன? வெறும் அழகுக்கு மட்டும் இல்லை, ஒரு மிகப்பெரிய தொழில்நுட்பம் கோபுரங்களில் ஒளிந்திருக்கின்றது.

திருச்செந்தூர் 


கோபுரங்கள் இருக்கும் ஊரிலேயே உயரமானதாய் அமைந்திருக்கும், அவற்றின் உச்சியில் கூர்மையான முனைகளைக் கொண்ட கலசங்களைப் பார்த்திருப்பீர்கள்.கலசங்களும் எதாவது வெள்ளம் வந்தால் தானியங்களை உயரத்தில் சேமித்து வைப்பதற்காகவே , கோபுரத்தின் உச்சியில் வைக்கப்பட்டன.கோபுரங்களின் வாசலில் மரத்தாலான கதவுகள் பொருத்தப்பட்டிருக்கும். இங்கு தான் இயற்பியலை எளிமையாகவும், பாதுகாப்பிற்காகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏளிமையான ஒரு செய்முறை மூலம் இதை பார்கலாம். ஒரு சிறிய செப்பு(copper) கம்பி, அதன் ஒரு முனையை ஒரு மிங்கலனுடன் இணைக்கவும், இன்னொரு முனையில் சிறிய மரத்துண்டை வைத்து , அதை மண்ணில் படுமாறு வைத்தால், மின்னாற்றல் அப்படியே மண்ணுக்குள் சென்று மறைந்துவிடும். இது தான் இடிதாங்கி செயல்படும் முறை. இது தான் கோபுரங்களிலும் உள்ளது. கூர் முனைகளைக் கொண்ட கலசங்கள் மின்னாற்றலை கிரகித்து, அதை கோபுரத்தின் வழியாக செலுத்தி கதவுகள் வழியாக மண்ணுக்குள் செலுத்துகின்றன. இதனால் தான் இன்றும் கிராமங்களில் கோபுரங்களை விட உயரமாக வீடு கட்டக்கூடது என்று கூறுகிறார்கள். இடி வீட்டில் விழுந்துவிடும் என்பதற்காக.

 பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இடிதாங்யை  தமிழர்கள் உருவக்கிவாக்கிவிட்டனர்.

@@அப்படீன்னா பெஞ்சமின் ஃப்ரங்க்ளின் கண்டுபிடுச்சது என்ன பஞ்சு முட்டாயா- னு mind voice la கேக்காதீங்க@@

Wednesday, 22 August 2012

கடவுள் இருக்கிறாரா?

இந்த கேள்விக்கு விஞ்ஞானபூர்வமாக பதிலளிக்க வேண்டுமானால், நம் பிரபஞ்சம் உருவான காலத்திற்கு போக வேண்டும்.
பிரபஞ்சம் உருவாவதற்கு முன் காலம்(time) என்ற ஒன்றே இருந்திருக்க முடியாது.( பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹவ்கிங்க் இப்படி சொல்கிறார் time and space born together, neither can exist before one another).பிரபஞ்சமும் காலமும் ஒரே  நேரத்தில் உருவானவை

எந்த ஒரு செயலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தான் நடைபெற முடியும்.

காலமே உருவாகத நிலையில், கடவுள் எப்படி தோன்றியிருக்க முடியும்?. எப்படி பிரபஞ்சத்தை உருவாக்கியிறுக்கக்கூடும்.